Published Date: June 19, 2024
CATEGORY: CONSTITUENCY

புதிதாக கட்டிய ரேஷன் கடை அங்கன்வாடி மையம் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உள்ளூர், வெளியூர் வெளிமாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். காலை, மாலை என இருவேளையும் பக்தர்கள் கோவிலுக்கு அனுமதிக்கப்படுகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு கிழக்கு, வடக்கு கோபுரம் சந்திப்பில் ஒரு கழிப்பறை, தெற்கு கோபுரம் வாசலில் ஒரு கழிப்பறை என இரு கழிப்பறைகள் உள்ளன. ஆனால் தினமும் வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு இது போதுமானதாக இல்லை என புகார் எழுந்தது. எனவே சித்திர வீதிகளில் கழிப்பறைகளை அதிகப்படுத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்.
அதன்படி மதுரை மத்திய தொகுதியில் எம்.எல்.ஏவும், அமைச்சருமான பழனிவேல் தியாகராஜன் கிழக்கு கோபுரம் பூங்கா அருகே மற்றும் தெற்கு கோபுரம் பழைய எஸ்.பி அலுவலகம் என இரு இடங்களில் தொகுதி நிதியில் இருந்து ரூபாய் 30 லட்சம் மதிப்பு இரண்டு கழிப்பறைகள் கட்ட நடவடிக்கை எடுத்தார். அதன்படி தெற்கு சித்தரை வீதியில் ரூபாய் 10 லட்சம் மதிப்பிலும், கிழக்கு சித்திரை வீதியில் ரூபாய் 20 லட்சம் மதிப்பிலும் புதிய கழிப்பறைகள் கட்டப்பட்டது. அதனை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இது தவிர திடீர் நகர் பகுதியில் ரூபாய் 12 லட்சம் மதிப்பில் ரேஷன் கடை கட்டிடம், மேலவாசலில் ரூபாய் 12 லட்சத்தில் அங்கன்வாடி மையம் ரூபாய் 8 1/2லட்சத்தில் புதிய கவுன்சிலர் அலுவலகமும் திறக்கபட்டது. நிகழ்ச்சியில் மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி கமிஷனர் தினேஷ் குமார், உதவி கமிஷனர் ரெங்கராஜன் மற்றும் அதிகாரிகள் கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Media: Dinakaran